சனிக்கிழமை, 05 January 2019 00:00

வாக்கு பொறுக்கும் அரசியல்வாதிகளிடம் சிறைபட்டிருக்கும் மலையக தமிழர்களின் சமூக அபிவிருத்தி

Written by 
Rate this item
(0 votes)
2015 ஆம் ஆண்டு மலைநாட்டு கிராமங்கள் சமுதாய அபிவிருத்தி எனும் புதிய அமைச்சு உருவாக்கப்பட்ட போது, மலையகம் வாழ் தமிழர்களின் காணியுரிமை இல்லா நிலை ஒழிந்து, நிலத்தின் மீது அதிகாரம் கொண்ட சமூகமாக மேம்படும்; மலையகம் எங்கும் தமிழர் பண்பாடு மிளிரும்; தமிழ் கிராமங்கள் தலையெடுக்கும் எனும் கனவு கண்டோம். ஆனால் அது வெறும் கனவாகியது மட்டும் அல்லாது, இனிவரும் பல தசாப்தங்கள் மலையகத்தில் உண்மையான கிராமங்கள் உருவாவதைத் தடுக்கும் அபாயகரமான விசமத்தனமாகியிருக்கின்றது. இந்த அமைச்சு உருவாக்கப்பட்ட மறுதினமே பொதுபலசேனா எனும் பௌத்த அடிப்படை வாத அமைப்பு, சிங்கலே மகாஜன பெரமுன எனும் இயக்கத்தை உருவாக்கி மலைநாட்டுப் புதிய கிராமங்கள் அமைச்சு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனும் எழுத்து மூலக் கோரிக்கையை முன்வைத்திருந்தது. பௌத்தசங்க மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தில் ~மலையகத்தில் பாரம்பரியமாக சிங்கள மக்கள் வாழ்ந்த காணிகளிலிருந்து துரத்தி யடிக்கப்பட்டே பெருந்தோட்டங்கள் உருவா க்கப்பட்டன, சிங்களவர்கள் வாழ்ந்த கிராமங்கள் சிங்களவர்களுக்கே திருப்பி கொடுக்கப்பட வேண்டும்;, இங்கு தமிழர்கள் சிங்களவர்களை ஒடுக்குவதற்காக அழைத்து வரப்பட்டவர்கள். எனவே அவர்கள் மலையக த்தில் வாழ வேண்டுமென்றால் சிங்களவர்க ளாக மாற வேண்டும்| எனக் கூறப்பட்டிருந்தது. மனித சஞ்சாரமற்ற இயற்கையான காடு களாகவிருந்த மலையக பகுதியில் சிங்கள கிராமங்களே இருந்ததாக வழமை போல் பொய் வரலாறைக் கூறி மலையகத்தில் புதிய கிராமங்கள் அமைக்கப்படுவதை தடுக்க பேரினவாதிகள் காட்டிய அவசரமும் பதற்ற மும் மலையகத்தில் அவர்களுக்கு உடை மைப்பாட்டு ரீதியிலான உடைமை எதுவும் இல்லை என்பதையும், மலையகத்தில் கிராமங்கள் உருவாகினால் அவர்களின் ஆக்கிரமிப்பு திட்டம் எல்லாம் பாலாய் போகும் என்பதை புடம் போட்டுக் காட்டியது. ஆனால், மலைநாட்டு புதிய கிராம அமைச்சு எந்தவித தூரநோக்கும் இல்லாது சிறு பிள்ளைத்தனமாக அமைத்த கிராமங்களை பார்த்து, பேரினவாதிகளே அவசரபட்டு எதிர்த் ததை நினைத்து வெட்கப்பட்டுருப்பார்கள்.அவசர அவசரமாக உருவாக்கிய இயக்கத் தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள். அந்தள வில் தான் மலையகயத்தில் அமைக்கப்படும் கிராமங்களின் கட்டமைப்பு இருக்கின்றது. மலையகத்தில் தமிழ் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் கிராமங்களானால் ஏற்படும் தாக்கங்களை பேரினவாதிகள் உணர்ந்த அளவு அரசியல்வாதிகள் உணரவில்லை. அதனால் தான், லயன்கள் எனப்படும் தொழிலாளர் குடியிருப்புக்களை, கொஞ்சம் தரமுயர்த்தி தனித்தனி வீடுளாக அமைத்துக் கொடுத்து, அதற்கு கிராமம் என பெயர் வைப்பதுடன் திருப்தி அடைந்து விடுகின்றார் கள். அவர்களை பொறுத்து வரையில் வாக்கு வங்கியை நிரப்ப இது போதும். அதைத் தாண்டிய சமூக நோக்கிலமைந்த பார்வையோ சிந்தனையோ இருப்பதில்லை. கிராமம் என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை பண்பாட்டு - பொருளாதார அலகாகும். மனித சமூகம் நிலையான இடத்தில் குடியிருப்புக் களை அமைத்து வாழ ஆரம்பித்த போது கிராமங்கள் உருவாகின. கிராமங்கள் பொரு ளாதார மையங்களாகிய போது நகரங்களா கின. சில கிராமங்கள் பின்வந்த காலத்தில் நாடாகின. ஆகவே, கிராமங்கள் என்பது வெறும் கட்டிடங்களும் பெயர்பலகையும் அல்ல. அவை ஒரு சமூகத்தின் உழைப்பின், கூட்டுவாழ்வின் விளைவும் களஞ்சியமும் ஆகும். இதற்கு மொழியும், கூட்டு வாழ்வின் செல்வாக்கு பரந்திருக்கும் நிலப்பரப்பும் ஆதாரமாகவும், பண்பாடு உயிர்நாதமாகவும் அமையும். மலையக தொழிலாளர்களை பொறுத்த வரையில், தமக்கான கிராமங்களை அமைத்துக்கொள்ள முடியாத வகையில், நிலத்தின் மீதான உரிமை மறுக்கப்பட்டு அடக்கப்பட்டருக்கின்றார்கள். மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்திகள் அமைச்சு மூலம் இந்த அடக்கு முறை விலங்கை உடைப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. மலையக தொழிலாளர்கள் அந்த தடையை உடைத்து சமுதாய அபிவிருத்தியை காண்பார்களாயின் மலையகத்தில் தமிழர் களின் பண்பாடும், மொழியும், தேசிய இருப்பும் அந்தஸ்த்தும் உடைமைப்பாட்டு ரீதியில் உறுதிபடுத்தப்படும். மலையக தமிழர்களை வந்தேறிகள் என்றும், வம்சாழியினர் என்றும் பேரினவாதம் முன்னெடுக்கும் காழ்ப்பு பிரச்சாரத்திற்கு முடிவுக்கட்டப்பட்டிருக்கும். இதை நன்கு தெரிந்ததால் தான் பொது பலசேனா எனும் பௌத்த பேரினவாத அமைப்பு, மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு உருவாக்பப்பட்டதுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. ஆனால் அந்த அமைச்சினதும், அமைச்சரின் அரசியல் கட்சியினதும் சிறுபிள்ளைத் தனமான வாக்கு பொறுக்கும் நோக்கிலான செயல்பாடுகள், அதற்கான எந்த தேவையையும் விட்டு வைத்திருக்கவில்லை சிறுபிள்ளை வேளாண்மை வீடு சேராது என்பது போல் சமூக அரசியல் பார்வையும் கொள்கையும் அற்றவர்களின் செயற்பாடுகள் மலையக மக்களின் இயற்கையான, தவிர்க்க முடியாத முன்னேற்றத்தையும் பல தசாப்தங் களுக்கு தடுத்து நிறுத்தும் தூர நோக்கற்ற ஒன்றாகவே இருக்கின்றது. ஏனெனில் தற்போது அமைக்கப்பட்டுவரும் நவீன லயன் குடியிருப்புகளில் வீடு பெற்றவர் கள் எவருக்கும் மீண்டும் வீடு கேட்க முடியாது. 99 வருட குத்தகைக்கு விடப் பட்டிருக்கும் பெருந்தோட்டங்களில் காணி உரிமை பெறவும் முடியாது. மலையக தோட்டத் தொழிலாளர்கள் ஆறு தலைமுறைகளை கண்டு விட்டார்கள். அதாவது குறைந்தது ஒவ்வொரு குடும்பமும் ஆறு குடும்பங்கள் ஆகியிருக்கின்றன. நாடற்றவர்காக ஆக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய காலத்திலிருந்து பார்த்தா லும், ஒவ்வொரு குடும்பமும் இன்று மூன்று குடும்பங்களாகியிருக்கின்றன. ஆனால் இந்த அதிகரிப்புக்கு ஏற்ப வீடுகள் கட்டிக்கொடுக் கப்படவே இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு மிகமிகச் சொற்பமான புதிய வீடுகளே வெறும் கண்துடைப்பு போல் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், மலையக தொழிலாளர் குடும்பங்கள் தன் சுய முயற்சியினால் காணிகளை வாங்கி தோட்டபுறங்களுக்கு வெளியே சொந்த வீடுகளை அமைத்துக் கொண்டிருக்கின்றார் கள். இவ்வாறு சுயமுயற்சியில் தமக்கான வீடுகளை அமைத்துக்கொண்டவர்கள் குறிப் பிட்ட பகுதிகளில் செறிவாக குடியேறியதால் நகர் புறத்தை அண்டிய பல சிற்றூர்கள் உருவாகியிருக்கின்றது. அதே போல் கணிசமானோர், தான் வாழும் தோட்ட புறங்களிலே பலவந்தமாகவோ, தோட்ட நிர்வாகத்தின் அனுசரனையுடனோ தனி வீடுகளை கட்டிக் கொண்டு , குறிப்பிட்ட அளவான காணிகளில் மரக்கறி உற்பத்தியில் முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ ஈடுப்படுகிறார்கள். இந்த பொருளாதர நடவடிக்கை உருவாக்கியிருக்கும் உற்பத்தி உறவுகளும், அவர்களின் குடித்தொகை அமைவும் தோட்டகுடியிருப்புக்களை அண்டிய வகையில் கிராமங்களாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு வளர்ச்சிக் கண்டிருக்கும் ஒரு சில கிராமங்களையும் இனங்காணக் கூடியதாகவிருக்கின்றது. அதேபோல் அநேகமானோர் பெருந்தோட்டக் கம்பனிகளால் வழங்கப்பட்ட தொழிலாளர் குடியிருப்புகளை வசதிக்கேற்ப விஸ்தரித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனினும் மலையக தொழிலாளர்களிடையே அதிகரித்த சனத்தொகை, புதிதாக குடும்பங் களாகியோரின் எண்ணிக்கையானது, மனித வாழ்வின் அத்தியாவசிய தேவையான வசிப் பிடங்களை புதிதாக அமைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நெருக்கடி தோட்ட தொழிலாளர்களின் படித்த சமூக அக்கறைக் கொண்ட தலைமுறையினரிடையே காணி உரிமை தொடர்பான வேட்கையை எழுச்சிகொள்ள செய்தபோது, தொழிலாளர்களுக்கான புதிய வீட்டுத்தொகுதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய நிலைக்கு பெருந்தோட்டத்துறை யும், அரசும் தள்ளப்பட்டது. அதனால் தான் ஆமை வேகத்தில் தொழிலா ளர்கள் தற்போது வாழும் லயன் எனப்படும் இருநூறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப் பட்ட தொழிலாளர் குடியிருப்பு விடுதிகளின் மாதிரியை விட சற்றே முன்னேற்றகரமான இரட்டை மாடி குடியிருப்புக்களையும், பின்னர் தனித்தனியான சிறிய குடியிருப்புக்களையும் அமைத்துக் கொடுக்க ஆரம்பித்தனர். இரட்டை மாடிக்குடியிருப்பானது அதே நவீன லயன்களாகவே இருந்தன. அதற்கு எதிராக குரல்கள் உயர்ந்த போதே தனிவீடுகள் கட்டிக்கொடுப்பது ஆரம்பமாகியது. எனினும் இவை அடிப்படையில் லயன் குடியிருப்பு சூழலில் இருந்து வேறுப்பட்டதாக அமைய வில்லை. இதற்கு இப்பத்தியில் எடுத்து காட்டிய மலைய தமிழர்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறை நிகழ்ச்சி திட்டமே காரணமாகும். லயன்குடியிருப்பு மாதிரியிலேயே மலையக தமிழர்களின் அடிப்படை பிரிவினரான தொழிலாளர்களை வைத்திருந்தால் அவர் களால் சமூக அபிவிருத்தியை காண் முடியாது என்பது திண்ணம். மேலும், காணியுரிமை கோரிக்கையை மழுங்கடிக்கும் சூழ்ச்சியாக புதிய வீடுகளை அமைத்துக்கொடுகிறார்கள். தற்போதைய அரசாங்கமும், அதில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகளும் லயன் மாதியான வீட்டுத்தொகுதிகளை அமைத்து கிராமம் எனும் பெயரிடும் வேடிக்கையை செய்து வருகின்றார்கள். இப்படியாக அவர் களின் வாக்கு வேட்டைக்காக பேரினவாதத் தின் சூழ்ச்சி திட்டத்திற்கு துணை போகின்றமையானது, இனிவரும் பல தசாப் தங்களுக்கு மலையக தொழிலாளர்கள் வீடு, காணி குறித்து குரல் எழுப்ப முடியாத நிலைக்கே அழைத்து செல்லும். எப்படி லயன் குடியிருப்புக்களில் 200 வருடங்கள் தொழிலாளர்கள் ஒடுக்கப் பட்டார்களோ, அதே போல் இன்னுமொரு 200 வருடங்களுக்கு அமைக்கப்பட்டு வரும் நவீன லயன்களில் ஒடுக்கப்படும் நிலை உருவாகும். இந்த அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் ஒன்றும் செய்யாவிட்டால் கூட தொழிலாளர் களாகவே சுயமுயற்சியில் தமக்கான கிராமங்களை உருவாக்கி கொள்வார்கள். அதை சான்று கூறும் வகையில் புதிய தலை முறையின் கல்வி வளர்ச்சியும் சிந்தனை வளர்ச்சியும் அமைந்திருக்கின்றது. எனவே அரசியல்வாதிகள் தொழிலாளர்க ளின் காணி உரிமைக்கும், உண்மையான சமுதாய அபிவிருத்திக்கும் தடையாக இருக்கும் விடயங்களை களைய செயல் படல் வேண்டும், மக்களின் சமூக அபிவிருத்திக்காக திட்டமிட்டு செயல்பட வேண்டும். மாறாக தம் வாக்கு பொறுக்கும் மலின அரசியலுக்காக சமூகமொன்றின் வளர்ச்சியை அடமானம் வைக்க கூடாது.
Read 273 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction