செவ்வாய்க்கிழமை, 01 அக்டோபர் 2019 00:00

தோழர் இரட்ணா

Written by 
Rate this item
(0 votes)
அதிகாரத்தின் கோரக் கரங்கள், அப்பாவி மக்களை அல்லல்; படுத்தும் போதெல்லாம், அவர்தம் விடுதலைக்கான வழியை கண்டறிந்து கொள்வதே நியதி. அவ்வண்ணமே விடுதலை பாதைக்கு திசைகாட்டுபவர்கள் உதிப்பதும் உலக வரலாறாகவிருக்கின்றது. அவ்வாறே ஈழவர்களின் நாயகர்களுள் ஒருவராக தோன்றியவர் தோழர் இரட்ணா.

ஈழவர்களின் விமோசனத்திற்கான போராட்டம் மிதவாத அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்துக்கு பலியாகி கொண்டிருந்த காலச்சூழலில், விடுதலை பாதைக்கு திசைக்காட்டியாக தோன்றி, தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஈழப்போராட்டமாக எடுத்தியம்பி சித்தாந்த வடிவம் கொடுத்தவர் தோழர் இரட்ணாவே. இவர்தான் வகுத்த சித்தாந்தத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக, ஈழப்புரட்சிகர மாணவர் இயக்கத்தை ஸ்தாபித்து அதன் வழிக்காட்டியுமானார். சிறிலங்கா அரசின் பல்கலைக்கழக அனுமதி தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், அவர்களை தத்துவார்த்த ரீதியாக வென்றெடுத்து ஈழப்போராட்டம் நோக்கி அழைத்து வந்தார்.

தோழர் இரட்ணா என தோழமையுடன் அழைக்கப்பட்ட, இளையத்தம்பி இரட்ணசபாபதி யாழ்ப்பாணத்தின் இணுவில் கிராமத்தில், 1938 ஆம் ஆண்டு கார்த்திகை 23ம் நாள் பிறந்தார். ஆரம்பக்காலத்தில் தமிழரசு கட்சியின் துடிப்பான செயற்பாட்டாளராகவும், பத்திரிக்கை எழுத்தாளராகவும் இருந்த போதே இனமுரண்பாடு குறித்த அனுவபார்வையை கொண்டிருந்தார். இளமைக்காலத்தில் மலையக பகுதிகளிலும் வாழ்;ந்ததால், அவர் மலையக தமிழர்களின் நிலைமைகளையும் அனுபவ ரீதியாக அறிந்துக் கொண்டிருந்தார்.

பின்னர் உயர் கல்விக்காக லண்டன் நகர் சென்ற போது, ஏனைய நாடுகளின் விடுதலை அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். இதன் மூலம் தன் சிந்தனையை பட்டைத்தீட்டிக் கொண்டு, இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பாட்டாளிவர்க்க விடுதலையின் கடமையாக எடுத்துரைத்து, இளைஞர்களை அணிதிரட்டி ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பை நிறுவினார். இவ்வமைப்பே பின்னர் ஈழப் புரட்சியாளர்களின் அமைப்பாகவும், ஈழப்புரட்சி அமைப்பாகவும் பரிமாணமடைந்தது.

இவர், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் இருந்;த தொடர்பை பயன்படுத்தி, ஈழப்போராட்ட இயக்கங்கள் பரஸ்பர ஒத்துழைப்புகளை பெற வழிவகுத்து கொடுத்தார். ஈழப் போராட்டத்தில் இந்தியாவிற்கு வெளியே உதவிகள் பெறப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவே ஆகும். பின் வந்த காலத்தில் இந்தியாவிலிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர்கள் ஈழப்புரட்சி அமைப்பின் உதவிகளை பெற்றமையும் நாம் நினைவுக்கூற வேண்டிய சம்பவமாகும்.

ஈழப்புரட்சி அமைப்பின் தத்துவார்த்த வழிக்காட்டியாகவிருந்த தோழர் இரட்ணா, அமைப்பின் தத்துவார்த்த ஏடாகவிருந்த தர்க்கீகம் பத்திரிக்கையினதும், அமைப்பின் சித்தாந்த நூலான ஈழவர் இடர்தீரவினதும் ஆசியரும் ஆவார். இலக்கியத்திலும், எழுத்திலும், அரசியல் பொருளாதார விடயங்களிலும், தத்துவ ஞானத்திலும் தேர்ச்சி பெற்றிருந்த தோழர் இரட்ணா, ஏராளமான வழிக்காட்டும் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஈழப்போராட்ட காலத்தில், தோழர் இரட்ணா தமிழுக்கு அறிமுகபடுத்திய கலைச்சொற்களின் எண்ணிக்கை கணிசமானதாகவிருக்கிறது. இவரின் இலக்கிய ஆளுமை அமைப்பின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எளிமையான ஐனரஞ்சக கோசங்களாக கொண்டு செல்ல பெரிதும் உதவியிருந்தது. ஈழப் போரட்ட இயக்கங்களில் வேறெந்த இயக்கத்தினரிடம், ஈழப்புரட்சி அமைப்பை போல் தம் கொள்கைகளை எடுத்து சொல்லும் கோசங்கள் இருந்திருக்கவில்லை என்றே கூறலாம்.

இவரின் வழிக்காட்டலும், அணுகுமுறையுமே சக இயக்கங்களுடன் மோதல் போக்கை தவிர்த்து, ஏனைய இயக்கத்தினருடன் நட்புறவுடன் செயற்படும் ஈழப் புரட்சி அமைப்பின் உயரிய இயக்க பண்பாட்டுக்கு காரணம் என்றால்; அதில் எந்த மிகையும் இராது. அதே போல் இவரது சிந்தனையும் வழிக்காட்டலுமே ஈழப்போராட்டம் ஆரம்பக் காலக்கட்டங்களில் சர்வதேச மயபடுத்தப்பட்டமைக்கும், சர்வதேச கவனத்தையும், ஆதரவையும் பெற்றமைக்கும் காரணமாகும்.

ஈழப்போராட்ட இயக்கங்களின் ஒருமைப்பாடு குறித்து தீவிரமாக வலியுறுத்தி வந்ததோடு, இவரின் கரிசனையின் காரணமாக சிலசமயங்களில் இயக்கங்கள் ஒன்றுபட்டிருந்தாலும், அது கைகூடாமல் போனமையானது துயரமானதாகும். எனினும் அன்றே, இயக்கங்களின் ஒற்றுமையின்மை போரட்டத்தை பின்தள்ளும் பகை முரணாகும் என எச்சரித்திருந்தார்.

இவரின் சிந்தனையின் வெற்றியாக ஈழப்போராட்ட இயக்கங்கள் திம்பு பேச்சுவார்த்தையில் கூட்டாக பங்குபற்றின. இப்பேச்சுவார்த்தைகளில், ஈரோசை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய இவர், மலையக மக்களின் பிரசாவுரிமை தொடர்பாக விட்டுகொடுக்காமல் வாதாடி அதில் வெற்றியும் பெற்றார். சிறிலங்கா அரசும், தமிழ் வலதுசாரிகளும் மலையக மக்களை வம்சாவளி மக்களாக கருதிய சந்தர்ப்பத்தில், இவர்களே ஈழத்தின் பாட்டாளி வர்க்க முதுகெழும்பு என ஆணித்தரமாக கூறினார்.

1989 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட தோழர் இரட்ணா 40000க்கு அதிகமான வாக்குகளை பெற்று பாரளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டிருந்தார். பாரளுமன்றத்தில் இவர் ஈழப்புரட்சி அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி ஆற்றிய உரையானது, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான காத்திரமான பதிவாக இன்றும் கவனிக்கப்படுகின்றது.

1990ம் ஆண்டு இயக்கம் கலைக்கப்பட்ட போது, போராட்ட வாழ்விலிருந்து ஒதுங்கி லண்டன் நகர் சென்றார். இறுதி வரை எதிரிகளிடம் சோரம் போகாது 2006ம் ஆண்டு, டிசம்பர் 12 ம் நாள் இயற்கை எய்தினார். இவரின் அந்திம காலம் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், ஈழப் போராட்டதில் இவரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் அழியாதவையாகும். அது வரை இவரது நாமமும் அழியாது வாழும் !
Read 156 times Last modified on செவ்வாய்க்கிழமை, 01 அக்டோபர் 2019 20:25

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction